வைட்டமின் சத்துள்ள உணவை உண்ணும் இளம் பெண்கள் விரைவாக கருத்தரிக்கிறார்கள் என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனின் வார்விக்ஷைர் பகுதியில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ரீனா அகர்வால் என்ற இந்திய வம்சாவழி டாக்டர் தலைமையிலான குழு இதைக் கண்டுபிடித்துள்ளது.
கருத்தரிக்காத 58 பெண்களை ஆய்வுக்குத் தேர்வு செய்து அவர்களை 30 – 28 என்று 2 பிரிவுகளாகப் பிரித்தனர். முதல் பிரிவில் உள்ளவர்களுக்கு சத்துள்ள உணவுடன் வைட்டமின் மாத்திரைகளையும் சேர்த்து அளித்தனர்.
இரண்டாவது பிரிவினருக்கு ஊட்டச்சத்துள்ள உணவுடன் போலிக் அமிலச் சத்து அளித்தனர்.
முதல் பிரிவினரில் அதிகம் பேர் 12 வாரங்களுக்குள் – அதாவது 3 மாதங்களுக்குள் – கர்ப்பம் தரித்தனர்.
இந்தச் சோதனை தொடங்குவதற்கு முன் 58 பேருக்கும் மாதவிடாய் ஒழுங்காக இருக்கவில்லை. பலர் 12 மாதங்களாகக் கருத்தரிக்காமல்தான் இருந்துள்ளனர்.
ஆனால் இந்த சிகிச்சை தொடங்கிய பிறகு வைட்டமின் சத்துள்ள உணவைச் சாப்பிட்டவர்கள் வெகு வேகமாக கருத்தரித்தனர். அத்துடன் அவர்களுடைய கருவும் 12 வாரங்களுக்குப் பிறகும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ந்துகொண்டே வந்தது. வைட்டமின் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட 30 பேரில் 18 பேர் கருத்தரித்தனர். இது 60% ஆகும்.
உடல் வளர்ச்சிக்கு மட்டும்தான் வைட்டமின் தேவை என்று இதுவரை கூறப்பட்டு வந்தது. குழந்தை பிறப்புக்கே அது தேவை என்று இப்போது தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட மகளிர் அனைவருமே கிட்டத்தட்ட ஒரே வயதினர், ஒரே எடையினர், கருத்தரிக்காமல் இருந்த காலமும் ஒரே மாதிரியாக இருந்தவர்களாகவே தேர்வு செய்யப்பட்டனர்.
அதிக அளவில் மதுபானம் குடிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்கள், கணவன்மார்களின் உயிரணுக்களில் அடிக்கடி மாற்றம் இருப்பவர்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை. கர்ப்பம் தரிக்க இந்தக் காரணிகள் தடையாக இருப்பவை என்பதால் அவர்களைச் சேர்க்கவில்லை.
வைட்டமின் சத்துள்ள உணவைச் சாப்பிடுவது எளிதானது, செலவு அதிகம் இல்லாதது. இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதுமில்லை. எனவே குழந்தை இல்லாதவர்கள் முதலில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள சத்துள்ள உணவை போதிய அளவு உட்கொள்ள வேண்டும். குழந்தை நல்ல வலுவுடனும் மூளைத் திறனுடனும் பிறக்க தாயாருக்கு சத்துள்ள, சரிவிகித உணவை அளிக்க வேண்டியது கட்டாயம். வைட்டமின் பி-12 சத்து அவசியம் தேவை என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது
No comments:
Post a Comment