Pages

Sunday, 16 December 2012

உடல் உறுப்பு தானம்: ஏன்? எதற்கு? எப்படி?

 
ஒரு மனிதன், தான் வாழும் இந்த ஜென்மத்தில் செய்யக்கூடிய மிக மிக உயர்ந்த காரியம் என்ன தெரியுமா?

- உடல் உறுப்புதானம்! ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல், இந்த புண்ணிய காரியத்தை பலரும் செய்வதில்லை. மரணம் அனைவருக்கும் பொதுவானது. எல்லோரும் இறுதியில் அந்தப் பாதையில் பயணித்துதான் ஆக வேண்டும்.
அப்போது, பொன் போல் உடலில் பாதுகாத்து வைத்திருக்கும் முக்கிய உறுப்புகளை மண்ணுக்குள் புதைக்காமல், ஆஸ்பத்திரிகளில் சில உறுப்புகளின் செயலிழப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு வழங்கி, அவர்கள் மூலம் நிலைத்து வாழ்வது, உடல் உறுப்பு தானத்தின் உன்னதம்.

ஒவ்வொரு நாளும் விபத்தில் சிக்கியோ, நோயால் பாதித்தோ ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நல்ல உறுப்புகளோடு மூளைச்சாவு நிலைக்கு போய் மரணத்தை தழுவுகிறார்கள்.

அந்த நல்ல உறுப்புகளை, பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கினால் (மரணமடைகிறவர்களின் உறுப்புகளால்) உயிருக்கு போராடுகிறவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். வெகுகாலம் வாழவும் செய்வார்கள்.

பிரியமான ஒருவர் மூளைச்சாவு அடைந்து, மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவரது குடும்பத்தினரிடம் போய் உடல் உறுப்பு தானம்பற்றி பேசுவது மிகக் கஷ்டமான அனுபவமாக இருக்கும் என்பது உண்மைதான்.

ஆனால் அதைப்பற்றி பேசி, உண்மையை புரியவைத்து, சரியான நேரத்தில் அவரது உறுப்பை தானமாக பெற்றுவிட்டால், மரணமடையப்போகும் அவரைப்பற்றி தலைமுறை தலைமுறையாக பெருமையாக பேசிக் கொண்டிருக்கலாமே! அவர் இறந்த பின்பும் பலரிடம் உறுப்புகள் மூலம் வாழ்ந்து, இறவாப் புகழ் பெற்றிருப்பதை நினைத்து காலங்காலமாக மகிழலாமே!

அதனால்தான் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்யும் குடும்ப உறுப்பினர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த உறுப்புகள் பொருத்தப்பட்டு பலர் உயிர் பிழைக்கிறார்கள். ஒருவரிடமிருந்து உடல் உறுப்புகளை தானமாகப் பெற அவர் மூளைச்சாவு அடைந் திருக்கவேண்டும் என்கிறது சட்டம்.

மூளைச்சாவு என்பது என்ன?

- மூளைச்சாவு அடைந்தவர்கள் உடலில் சலனமே இருக்காது. மிக பயங்கரமான வலியைக்கூட அவர்களால் உணரமுடியாது. முழுமையாக தசை அசைவற்ற நிலையில் காணப்படுவார்கள்.

- கண்களில் பார்வைத்திறன், அசைவுத்திறன், செயல்திறன் போன்றவை முழுமையாக முடங்கிப் போயிருக்கும்.

- அவர்களால் இயற்கையாக சுவாசிக்க முடியாது. அதனால் செயற்கை சுவாசத்தில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிசெய்ய நிறைய விதிமுறைகள் உள்ளன. அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ள நான்கு டாக்டர்கள் அடங்கிய குழு அவரை பரிசோதிக்கும். அந்த குழுவில் நரம்பியல் நிபுணரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் இருக்கவேண்டும்.

அவர்கள் அரசு இதற்காக உரு வாக்கி இருக்கும் குழுவில் இடம் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் நோயாளியிடம் எட்டுவிதமான பரிசோதனைகளை இரண்டு கட்டமாக நடத்தி அவர் மூளைச்சாவு அடைந்திருப்பதை உறுதி செய்வார்கள். மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து 10 விதமான உறுப்புகளை எடுத்து, மற்றவர் களுக்கு பயன்படுத்தலாம்.

அவை கண்கள் (கார்ணியா), நுரையீரல், இதயம் மற்றும் வால்வுகள், ஈரல், கிட்னிகள், குடல், சருமம், எலும்பு போன்றவை! ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும் அவரது இதயம் தனது செயல்பாட்டை நிறுத்தாது. அதனால் ரத்த ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாது. அந்த சூழலில்தான் அவரது உறுப்புகளை, சட்ட முறைப்படி, ரத்த சம்பந்தமுள்ள உறவினர்களின் ஒப்புதலோடு எடுக்கிறார்கள்.

எடுப்பதும், தேவைப்படுகிறவருக்கு பொருத்துவதும் மிக நுட்பமான, முக்கியத்துவம் வாய்ந்த சேவையாகும். இந்தியாவில் உடல் உறுப்புகள் தேவைப்படுவோர் எண்ணிக்கைக்கும்-கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் சராசரியாக ஒரு வருடம் 80 லட்சம் பேர் இறக்கிறார்கள். அவர்களில் ஒரு சில நூறு பேரின் உறுப்புகள்தான் தான மாக கிடைக்கின்றன. தேவைப்படும் அளவு உறுப்புகள் தானமாக கிடைத்தால், ஒருசில உறுப்புகளின் செயல்பாடு சரி இல்லாமல் மரணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடலாம்.

மூளைச்சாவை எட்டியவர்களிடம் இருந்து மட்டுமே உறுப்புகள் தானம் பெற முடியும் என்பதில்லை. உயிரோடு இருப்பவர்களும் கிட்னி, ஈரல் போன்ற குறிப்பிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம். அப்படி தானம் செய்யும்போது தனது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும், வாழும் மீதிகாலம் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்றும் தானம் செய்பவர்கள் நினைப்பது சரியில்லை.

அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வும், குறிப்பிட்ட காலத்திற்கு பரிசோதனைகளும் மட்டுமே அவசியமாகும். ஈரல்தானம் செய்தால் 6 மாத ஓய்வும், கிட்னி தானம் செய்தால் 3 மாத ஓய்வும் தேவை. மூளைச்சாவை சந்திக்கும் ஒருவர் உடலில் இருந்து எடுக்கப்படும் தான உறுப்புகளால் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பிழைக்க வைக்கமுடியும்.

உதாரணத்திற்கு ஒருவரிடம் இருந்து பெறப்படும் 2 கிட்னிகளை இருவருக்கு பொருத்தலாம். ஈரலையும் இரண்டு பேருக்கு தரலாம். இதயம், கார்ணியா போன்றவைகளும் பயன்படும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எடுப்பதும், தேவைப்படுகிறவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருத்துவதும் மிக முக்கியமானதாக இருக்கிறது.

உடல் உறுப்புகளை தானமாகப்பெற்று, பொருத்துவதில் மிக முக்கிய சரித்திர திருப்பம் ஏற்பட்டது. 1954-ம் ஆண்டு! அப்போதுதான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. 1966-ம் ஆண்டு இதய மாற்று ஆபரேஷன் தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. பின்பு 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இதர உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை பிரபலமானது.

ஈரல் மாற்று அறுவை சிகிச்சை 1989-ம் ஆண்டும், ஒருவரது ஈரலை இருவருக்கு பொருத்திய அறுவை சிகிச்சை 1996-ம் ஆண்டிலும் நடந்தது. மனித வாழ்க்கை மகத்துவம் நிறைந்தது. அதை மேலும் மகத்துவம் நிறைந்ததாக்க, உடல்உறுப்புதானம் செய்ய முன்வருவோம்!

No comments:

Post a Comment