Pages

Monday 24 December 2012

ரவை கேசரி

ravai kesari 1
தேவையான பொருள்கள்:
ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்
ஏலப்பொடி
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்
ravai kesari 3
செய்முறை:
  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.
  • இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.
  • ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
  • ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
  • இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.
  • பொரித்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.
ravai kesari 2
* இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம். அல்லது விருந்துகளின் இறுதியில் dessert உணவு மாதிரி தருவதாக இருந்தால் இப்படிச் செய்யலாம்; ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி, ஒவ்வொரு முறையும் ஒரு முந்திரி, சில கிஸ்மிஸ்களை அடியில் போட்டு, அந்தக் கரண்டியால் சூடான கேசரியை எடுத்து கப்பில் போட்டால் ஒரே அளவாகவும் மேல்ப்பகுதி அலங்கரித்தும் இருக்கும். 5, 6 தடவைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் கரண்டியில் சிறிது நெய் தடவினால் ஒட்டாமல் விழும்.
* கேசரிக்கு கிஸ்மிஸ் பழைய ஸ்டைல். ஒரு திருமணத்தில் டூட்டிஃப்ரூட்டியைப் பார்த்டேன். கிஸ்மிஸ் மாதிரி இடையில் புளிக்காமல் சுவையாக இருந்தது.
* கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில்  1 3/4 கப். வடஇந்தியர்கள் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சர்க்கரை மட்டும் சேர்ப்பதைத் தான் தாங்க முடியவில்லை என்றால் அல்வா என்று சொல்லிவிட்டு அநியாயத்துக்கு ‘சூஜி கா அல்வா’ என்று கேசரியை நீட்டுகிற(அல்வா கொடுப்பது என்பது இதுதானா?) செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே. :) கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்(எப்படி ஆகும்?) சிறிது கோதுமை மாவை நன்கு வறுத்துச் சேர்க்கவும்.
* பலருக்கு கேசரியில் பால் சேர்ப்பது பிடித்திருக்கிறது. எனக்கு பாலின் ஃப்ளேவர் இதில் வருவதில் விருப்பமில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு ஒரு கப் கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளலாம்.
# 2.
புதிதாகச் செய்பவர்கள், ரவை கட்டி தட்டிவிடும் என்று அஞ்சுபவர்கள், கேசரி பொலபொலவென உதிராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள், அந்தப் பதினைந்து நிமிட நேரம் கூட கவனிக்க நேரமில்லாமல் வேறு வேலை இருப்பவர்கள் கீழே சொல்லியுள்ள மாதிரியும் செய்யலாம்.
  • ஒரு கப் ரவையை 1/2 கப் நெய்யில் பொரித்த மாதிரி பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த ரவையுடன் ஒரு கப் சூடான பால், கேசரி கலர், ஏலப்பொடியும் கலந்து வைக்கவும்.
  • குக்கர் உள்பாத்திரத்தில் தேவையான சர்க்கரையை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும்(பாகு ஆகிவிட வேண்டாம்.) பால் சேர்த்த ரவையையும் சேர்த்துக் கலந்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடலாம். மீதி நெய், வறுத்த முந்திரி இத்யாதிகளைக் கலந்து பரிமாறலாம். இந்த முறையில் ரைஸ் குக்கரிலும் செய்யலாம். கேசரி உதிர் உதிராக வரும். அளவு நிறைய செய்யும்போது இந்த முறை வசதியானதும் கூட.

No comments:

Post a Comment